< Back
தேசிய செய்திகள்
விடுமுறையில் ஊருக்கு வருகிறேன் என கூறிய சில மணிநேரங்களில்... ராணுவ வீரர் வீரமரணம்
தேசிய செய்திகள்

விடுமுறையில் ஊருக்கு வருகிறேன் என கூறிய சில மணிநேரங்களில்... ராணுவ வீரர் வீரமரணம்

தினத்தந்தி
|
16 July 2024 2:22 PM GMT

அஜய்யின் தந்தை கமல் சிங் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மற்றொரு மாமாவான கயாம் சிங் நருகா, 2021-ம் ஆண்டில் சேனா விருது பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரின் பைசாவடா கலான் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அஜய் சிங் நருகா. நேற்று தன்னுடைய வீட்டுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய அஜய், போர் நடந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

ஆனால், எனக்கு விடுமுறைக்கான அனுமதி கிடைத்து விட்டது. 20-ந்தேதி ஊருக்கு வந்து விடுவேன் என பேசியுள்ளார். அவர் நம்பிக்கையுடன் பேசினாலும், ராணுவத்திடம் இருந்து இன்று காலை அஜய்யின் தந்தைக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவருடைய குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜய் உயிருடன் இல்லை என்பதே அந்த செய்தி. காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் தேசா வன பகுதிகளில் நேற்றிரவு பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுண்ட்டரில் மேஜர் அளவிலான அதிகாரி ஒருவர் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் அஜய்யும் ஒருவர்.

கடைசியாக 3 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்ற அஜய்க்கு, ஷாலு கன்வார் என்ற மனைவி உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது. அஜய்யின் மாமா ஓம் பிரகாஷ், ராஜஸ்தான் போலீசில் உதவி காவல் துணை ஆய்வாளராக உள்ளார்.

அவரின் மற்றொரு மாமா சுஜன் சிங் எல்லை பாதுகாப்பு படையில் இருந்தபோது, 2021-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி ஒடிசாவின் லகிம்பூரில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியானார்.

அஜய்யின் தந்தை கமல் சிங் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மற்றொரு மாமாவான கயாம் சிங் நருகா, 2021-ம் ஆண்டில் ராணுவத்தின் உயரிய சேனா விருது பெற்றுள்ளார். அஜய்யின் உடல் இன்றிரவு ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்