சீனியர் சிட்டிசன் சலுகை நீக்கம்: கூடுதலாக ரூ.5,800 கோடி வருவாய் ஈட்டிய ரெயில்வே
|கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ரெயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் ரெயில்வே சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக, தொலைதூர பயணங்களுக்கு சாமானிய மக்களுக்கு ரெயில் சேவை வரப்பிரசாதமாகவும் விளங்கி வருகிறது.
இந்த ரெயில்களில் பயணிக்கும் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும், கடந்த 2009-ம் ஆண்டு முதல் ரெயில்வே துறை வழங்கி வந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ரெயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ5,800 கோடி வருவாய் இந்திய ரெயில்வே நிர்வாகத்துக்கு மிச்சமாகி உள்ளதாம். ரெயில்வேயை பொறுத்தவரை சேவைத்துறையின் கீழ் வருவதால், லாப நோக்கமின்றி மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.