போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் எச்சரிக்கை
|விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என்பதால் பதற்றம் நிலவுகிறது.
சண்டிகார்:
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி பயணத்தை தொடங்கினர். அரியானா வழியாக அவர்கள் டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கானவுரி ஆகிய எல்லைகளைக் கடக்க விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர். இதனால் விவசாயிகள் அந்த எல்லைப்பகுதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், பருத்தி, பருப்பு வகைகள், மக்காச்சோளம் ஆகிய 3 விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த 3 விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் உத்தரவாதங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என கூறி பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று பேரணியாக செல்ல திட்டமிட்டனர்.
ஷம்பு எல்லையில் போலீசார் வீசும் கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ள இரும்பு கேடயங்கள், சணல் சாக்குகள் ஆகியவற்றுடன் தயாராகினர். மேலும், போலீசார் அமைத்துள்ள பாதுகாப்பு வேலிகளை உடைப்பதற்காக ஜே.சி.பி. இயந்திரங்களையும் கொண்டு வந்து நிறுத்தினர். தடைகளை தகர்க்க விவசாயிகள் ஆயத்தமானதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. அவர்களை அரியானா மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஆனால் காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி விவசாயிகள் திட்டமிட்டபடி இன்று பேரணியை தொடங்க முயற்சி செய்தனர். போலீசார் அமைத்துள்ள பேரிகார்டுகளை நோக்கி முன்னேறி வந்தனர். இதைக் கவனித்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
விவசாயிகளுக்கு வழங்கிய ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை, அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக திரும்ப பெறவேண்டும் என அரியானா காவல்துறை எச்சரித்துள்ளது.
"பொக்லைன்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் தயவு செய்து உங்கள் கனரக இயந்திரங்களை போராட்டக்காரர்களுக்கு வழங்காதீர்கள். ஏற்கனவே வழங்கிய இயந்திரங்களை போராட்ட களத்தில் இருந்து திரும்பப் பெறுங்கள். ஏனெனில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அவற்றை பயன்படுத்தினால், பாதுகாப்புப் படையினருக்கு தீங்கு விளைவிக்கலாம். இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படலாம்" என காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம், பேரிகார்டுகளை உடைக்கலாம் என்பதால் அந்த வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி பஞ்சாப் காவல்துறைக்கு அரியானா காவல்துறை ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.