செயலி உதவியுடன் ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி கவர்ந்து, 7 சிறுமிகள் பலாத்காரம்
|சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் செயலி ஒன்றின் உதவியுடன், ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி, உதவி தொகை பற்றி பேசுவோம் என கூறி கவர்ந்து, பழங்குடியின சிறுமிகள் 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மஜாவ்லி காவல் நிலையத்தில் சிறுமி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் முக்கிய குற்றவாளியான பிரிஜேஷ் பிரஜாபதி (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
இதுபற்றி ரேவா சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் ஐ.ஜி. மகேந்திர சிங் சிகர்வார் தொடர்ந்து கூறும்போது, சிறுமி அளித்த புகாரில், அவரிடம் பெண் குரலில் ஆண் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார். சிறுமியிடம் படிப்புக்கான உதவி தொகை கிடைக்க உதவி செய்கிறேன். அதுபற்றி பேச வேண்டும்.
இதற்காக தனியாக ஓரிடத்திற்கு வந்து நேரில் சந்திக்கும்படி அந்நபர் கூறியுள்ளார். அதனுடன், வேறொரு நபர் வந்து சிறுமியை சந்தித்து, முன்பே குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்வார் என்றும் கூறியுள்ளார். இதனை அந்த சிறுமியும் நம்பியிருக்கிறார்.
இதன்பின்னர், அந்த பகுதிக்கு சிறுமி சென்றுள்ளார். ஆனால், நேரில் சென்ற பின்னரே அது பெண் அல்ல. ஆண் என்று தெரிய வந்தது. சிறுமியை அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என சிகர்வார் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றிய முழு விவரங்களையும் போலீசில் சிறுமி புகாராக தெரிவித்து இருக்கிறார்.
இதன்படி செயல்பட்டு முக்கிய குற்றவாளி மற்றும் அவருடைய 3 கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், 7 சிறுமிகளை இதுபோன்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இவர்களில் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.
அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என சிகர்வார் கூறியுள்ளார்.
சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர். அவர்களின் மொபைல் போன்களையும் பறித்து, கூட்டாளிகளின் உதவியுடன் அவற்றை விற்றுள்ளனர்.
குரல் மாற்றி பேச உதவும் செயலியை பயன்படுத்தி, ஆசிரியை போல் பேசி, உதவி தொகை பற்றி பேசுவோம் என கூறி கவர்ந்து, பழங்குடியின சிறுமிகள் 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி மோகன் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபோன்ற கண்டனத்திற்குரிய செயல்களில் ஈடுபடுபவர்கள் சமூகத்தின் எதிரிகள். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சூழலிலும் குற்றவாளிகள் தப்ப முடியாது என எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.