< Back
தேசிய செய்திகள்
22 ஆண்டுகள் தலைமறைவு: பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது
தேசிய செய்திகள்

22 ஆண்டுகள் தலைமறைவு: பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது

தினத்தந்தி
|
26 Feb 2024 9:10 AM IST

சிமி இயக்க செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டும் பணியில் ஹனிப் ஷேக் ஈடுபட்டு வந்துள்ளார்.

புதுடெல்லி,

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். மராட்டிய மாநிலத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய நிலையில் அவர் சிக்கினார்.

தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர் ஹனிப் ஷேக் (வயது 47).

இவர் மீது கடந்த 2001-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி போலீஸ் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ், தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், 2002-ம் ஆண்டு அவரை டெல்லி கோர்ட்டு, தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.

அப்போதிருந்து ஹனிப் ஷேக் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பற்றிய தகவல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆதரவாளர்களை பற்றிய தகவல்களை சேகரிக்க டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழு நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து ஹனிப் ஷேக் பற்றிய தகவல்களை சேகரித்தது. அத்தகவல்கள் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கு உதவியாக இருந்தன. அவருக்கு பொறி வைக்கப்பட்டது.

சம்பவத்தன்று, மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரில் முகமதின் நகரில் இருந்து காகா ரோடு நோக்கி ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் ஹனிப் ஷேக் என்று போலீசார் உறுதி செய்தனர்.

அவரை சுற்றி வளைத்தபோது, அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டிச்சென்று பிடித்து கைது செய்தனர். தலைமறைவாகி, 22 ஆண்டுகள் கழித்து அவர் பிடிபட்டுள்ளார்.

ஹனிப் ஷேக் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் ஒரு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது. டெல்லியில் இருந்து அவர் நேராக ஜல்கோன் மாவட்டத்துக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.

ஹனிப் ஷேக், 'சிமி' இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். அந்த இயக்கத்தில் சேர்ந்தார். அதன் வாராந்திர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிற இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளார்.

'சிமி' இயக்க செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். 2001-ம் ஆண்டு, அந்த இயக்க பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அதில் அவரது பெயர் 'ஹனீப் ஹுடாய்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில், அவரைப் பற்றிய அந்த ஒரு தகவல் மட்டும்தான் போலீசாரிடம் இருந்தது.

இத்தகவல்களை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு துணை கமிஷனர் அலோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்