< Back
தேசிய செய்திகள்
1997க்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜக்தீப் தன்கர் சாதனை!
தேசிய செய்திகள்

1997க்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜக்தீப் தன்கர் சாதனை!

தினத்தந்தி
|
7 Aug 2022 10:25 AM IST

துணை ஜனாதிபதி தேர்தலில் ஏறக்குறைய 73 சதவீத வாக்குகளுடன், ஜக்தீப் தன்கரின் வெற்றி வித்தியாசம், 1997க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் மேற்குவங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்க்ரெட் ஆல்வாவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 பேர் உள்பட 245 பேரும், மக்களவையில் நியமன உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 545 பேரும், நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்த்து மொத்தம் 790 பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு, நேற்றே முடிவு அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 395 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மொத்தம் உள்ள 725 செல்லுபடியாகும் வாக்குகளில் 72.8% வாக்குகளை தன்கர் பெற்றார்.தங்கர் 528 வாக்குகளும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றனர்.

இதன்மூலம், இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி முதல் மக்களவை சபாநாயகர் வரை அனைத்து முக்கியப் பதவிகளையும் பாஜக இப்போது வகிக்கிறது.

பைரோன் சிங் ஷெகாவத்துக்குப் பிறகு ராஜஸ்தானில் இருந்து இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி ஆன பெருமை ஜக்தீப் தன்கருக்கு கிடைத்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஏறக்குறைய 73% வாக்குகளுடன், ஜக்தீப் தன்கரின் வெற்றி வித்தியாசம், 1997 க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது.

1992-ல் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான 701 வாக்குகளில் 700-ஐப் பெற்று, அதிக வெற்றி வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக கே.ஆர்.நாராயணன் முன்னணியில் இருக்கிறார்.

2007 துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 762 செல்லுபடியாகும் வாக்குகளில் 60.51% வாக்குகளை காங்கிரசின் முகமது ஹமீது அன்சாரி பெற்றார். 2017 துணை ஜனாதிபதி தேர்தலில், மொத்த செல்லுபடியாகும் 760 வாக்குகளில் 67.89% வாக்குகளைப் பெற்று வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.

வெங்கையா நாயுடு 2017ல் பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட தன்கரின் வெற்றி வித்தியாசம், 2% அதிகமாக உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கரின் வெற்றி வித்தியாசம், கடந்த ஆறு முறை நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அதிகபட்ச வெற்றி வித்தியாசமாகும்.

மேலும் செய்திகள்