அரபிக்கடலில் தேசியகொடிகளுடன் 75 மீன்பிடி படகுகள் பயணம்; கலெக்டர் ராஜேந்திரா தொடங்கி வைத்தார்
|75-வது சுதந்திர தின விழாவையொட்டி பந்தர் துறைமுகத்தில் இருந்து 75 மீன்பிடி படகுகள் தேசிய கொடிகளுடன் பயணம் மேற்கொண்டன. இதனை கலெக்டர் ராஜேந்திரா தொடங்கி வைத்தார்.
மங்களூரு;
வீடுகளில் தேசிய கொடி
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் இரவு-பகல் முழுவதும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு பள்ளி, கல்லூரி, படிக்கும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என கூறியுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இ்ந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா சுதந்திர தின கொண்டாட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அதற்கான பணிகளை விரைவாக செய்து முடிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
படகுகளில் தேசிய கொடி
இந்த நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மங்களூரு அருகே உள்ள பந்தர் மீன்பிடி துறைமுகத்தில் 75 படகுகளில் ேதசிய கொடிகள் பறக்க விடப்பட்டது. அந்த படகுகளை மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், தேசிய கொடிகளை பறக்கவிட்டபடி படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. முன்னதாக கலெக்டர் தேசிய கொடி அசைத்து தேசியகொடிகளுடன் சென்ற மீன்பிடி படகுகளின் பயணத்தை தொடங்கிவைத்தார்.
கோலாகல கொண்டாட்டம்
இதுகுறித்து கலெக்டர் ராஜேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக படகுகளில் தேசியகொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளன என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் ஹரிஷ், கடலோர காவல்படை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.