< Back
தேசிய செய்திகள்
NDA parties will join India Bloc
தேசிய செய்திகள்

இந்தியா கூட்டணியில் இணைய என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் வரிசையில் நிற்கும்: ஜெய்ராம் ரமேஷ் கணிப்பு

தினத்தந்தி
|
31 May 2024 7:00 PM IST

2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்தமுறை பல மாநிலங்களில் மிகச் சிறந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறும் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியானபின், என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வரிசையில் நிற்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி தெளிவான தீர்க்கமான முழு மெஜாரிட்டியை பெறும். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவதற்கான வரிசையில் நிற்கும்.

2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்தமுறை பல மாநிலங்களில் மிகச் சிறந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும். தேர்தல் முடிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மற்றொரு பல்டி அடிக்க வாய்ப்புள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பல்டி அடிப்பது நிதிஷ் குமாரின் பழைய பழக்கம். அவர் ஜூன் 4-ந்தேதி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், நாங்கள் அவர் இல்லாமல் மெஜாரிட்டி பெறப்போகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளத்தின் உதவி தேவையில்லை.

பீகாரில் இருந்து ஆச்சர்யமான முடிவை பார்க்கப் போகிறீர்கள். அங்கே பல்டி தேவையிருக்காது. ஆனால் பல்டியடிக்க விரும்பினால், அதை நம்மால் தடுக்க முடியாது.

ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா மாநிலங்களில் 2019-ல் நாங்கள் தோல்வியடைந்தோம். இந்த முறை இந்த மாநிலங்களில் எங்களுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும். ராஜஸ்தானில் எங்களுக்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் நாங்கள் கூட்டணியாக சிறப்பான வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்