மத்திய பிரதேசத்தில் பரிதாபம்: 2 வயது சகோதரன் உடலுடன் சாலையில் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்
|உயிரிழந்த தனது சகோதரனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 8 வயது சிறுவன் சாலையில் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தூர்,
மத்தியப்பிரதேசம், மொரோனா மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தை சேர்ந்தவர் பூஜாராம். இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பூஜாராமின் 2 வயது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டது. அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து மொரோனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை. மருத்துவமனை வளாகத்தில் வெளியே உள்ள ஆம்புலன்சில் ஆயிரத்து ஐந்நுறு ரூபாய் கேட்டுள்ளனர்.
இதனால் வேறு இடத்தில் சென்று வாகனம் தேடி வருவதாக கூறி தனது மூத்த மகன் மற்றும் உயிரிழந்த மகனின் உடலை அங்குள்ள ஒரு பூங்காவிற்கு அருகே வைத்து விட்டு சென்றார். தனது சகோதரனின் உடலுடன் அரைமணி நேரமாக 8 வயது சிறுவன் சாலையில் காத்திருந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர்.