பணிநீக்க பட்டியலில் இணைந்த விப்ரோ: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
|வணிக கண்ணோட்டத்தோடு பணிநீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு, ஊழியர்களின் திறன் மற்றும் வணிக கண்ணோட்டத்தோடு பணிநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விப்ரோ நிர்வாகம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சி செய்யும் காரணத்தால் ஆன்சைட்டில் பணியாற்றும் நடுத்தர பதவிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் அளவை உயர்த்தும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ள அந்நிறுவன தலைமை நிதியியல் அதிகாரியான அபர்னா, இந்தப் பணிநீக்க திட்டத்தை நிர்வாகத்திடம் முன்வைத்து, தற்போது நடுத்தர ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
விப்ரோ 2021ம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான கேப்கோவை (CAPCO) சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது, இது விப்ரோ தியரி டெலாபோர்டே தலைமையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவாகும். கொரோனா தொற்றுக்குப் பின்பு ஏற்பட்ட வர்த்தக சரிவால் இந்த முடிவு பெரும் ஓட்டையை விப்ரோ மார்ஜினில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நான்கு பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ விளங்கியபோதும், இதர 3 நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. விப்ரோவின் 16 சதவீத மார்ஜின் என்பது, டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் ஹெச்.சி.எல். டெக்னாலஜியை விட குறைவானதாகும்.