< Back
தேசிய செய்திகள்
ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை: 300 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த விப்ரோ- கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்

 Image Courtesy: PTI/ AFP

தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை: 300 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த விப்ரோ- கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்

தினத்தந்தி
|
21 Sept 2022 6:21 PM IST

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த 300 ஊழியர்களை விப்ரோ பணி நீக்கம் செய்துள்ளது.

சென்னை,

ஒரு நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணிபுரிந்தபடி, ஓய்வு நேரத்தில் இன்னொரு பணியை மேற்கொண்டு, வருவாய் ஈட்டுவது, 'மூன்லைட்டிங்' என்று அழைக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் ஐடி துறையை சேர்ந்த பெரும்பாலான நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பலர் தங்களுடைய அலுவலகப் பணிகளை முடித்து விட்டு, மீதி இருக்கும் நேரத்தில், வேறு பணிகளைச் செய்து, கூடுதல் வருவாய் பெற்று வந்தனர்.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நிறுவனங்கள் நேரடியாக இயங்க ஆரம்பித்த பின், மூன்லைட்டிங் கூடாது என்று சில நிறுவனங்கள் கடுமை காட்டுகின்றன. அதே நேரம், சில நிறுவனங்கள் மூன் லைட்டிங்கிற்கு அனுமதி வழங்கி உள்ளன.

இது தொடர்பாக கடந்த வாரம் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர் வேறு எந்த நிறுவனத்துடனும் பகுதி நேர புராஜெக்ட் அல்லது தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருந்தது. இது இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தங்கள் நிறுவனதின் 300 ஊழியர்கள் ஒரே நேரத்தில் தங்களின் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்வதை இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த 300 ஊழியர்களையும் ஒரே நேரத்தில் விப்ரோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று பேசிய விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில், "விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், எங்கள் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் அவ்வாறு வேலை பார்க்கும் 300 ஊழியர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளோம்" என்றார்.

விப்ரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு ஐடி ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்