நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
|குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் வரை நடத்தப்பட இருந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது.
இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக இன்றுடன் முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தகவலை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ்,புத்தாண்டுக்காக முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்க பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்த, நிலையில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.