கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது
|கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது. செப்டம்பரில் மழைக்கால கூட்டத்தொடர் நடக்க வாய்ப்புள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது. செப்டம்பரில் மழைக்கால கூட்டத்தொடர் நடக்க வாய்ப்புள்ளது.
தற்போதைக்கு இல்லை
கர்நாடக சட்டசபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அதாவது கவர்னர் உரை தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜூலை மாதம் மழைக்கால கூட்டத்தொடரை விதான சவுதாவில் நடத்த வேண்டும். ஆனால் பா.ஜனதா அரசு இந்த கூட்டத்தொடரை தற்போதைக்கு நடத்துவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தேர்தலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால், பா.ஜனதா அரசு சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் சபாநாயகர் காகேரி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் 15 நாட்களுக்கு பிறகே நாடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
பெலகாவியில் நடத்த முடிவு
அதனால் வருகிற செப்டம்பர் மாதம் இந்த மழைக்கால கூட்டத்தொடரை அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. மழைக்காலம் முடிவடையும் தருவாயில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரை பெங்களூருவுக்கு பதிலாக பெலகாவியில் நடத்துவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த கூட்டத்தொடரை நடத்திவிட்டால் டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாது என்று சொல்லப்படுகிறது. அதனால் மழைக்கால கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.