< Back
தேசிய செய்திகள்
குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
6 Dec 2022 4:51 PM IST

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது.

நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் இன்று கூடியது.

இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரி முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய், தெரீக் ஓ பிரையன், தி.மு.க.வின் திருச்சி சிவா மற்றும் டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை எழுப்பப்பட்டன. இதுதவிர, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நியமனத்தில் காட்டப்பட்ட அவசரம் பற்றியும் கூட்டத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

ஆளும் அரசால், மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ், எதிர்க்கட்சியினருக்கு கூடுதல் நேரம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தியது.

இதுதவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மசோதாவை கொண்டு வரவேண்டும், போதை பொருள் வினியோகம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு பற்றிய விவாதம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டன.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, விதிகள் மற்றும் அவை தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து விவகாரங்களை பற்றியும் ஆலோசனை நடத்தவும் மற்றும் விவாதம் மேற்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று கூட்டத்தில் உறுதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்