மத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு - அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு
|மத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றம் சாட்டிய: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு தொடர அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு செய்துள்ளார்.
கவுகாத்தி,
அசாம் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா. இவரது நிறுவனம் ஒன்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதை ஹிமந்தா பிஸ்வா மறுத்திருந்த நிலையில், தற்போது குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் எம்.பி. மீது பூயன் சர்மா அவதூறு வழக்கு தொடரப்போவதாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு பெண் தொழில் முனைவோரை தலைவராக கொண்டு இயங்கும் 17 ஆண்டு கால அசாம் தொழில் நிறுவனத்தை கவுரவ் கோகாய் களங்கப்படுத்தி உள்ளார். இந்த குற்றச்சாட்டில் இருந்து எங்கள் கடின உழைப்பாளிகளான ஊழியர்களின் கவுரவத்தை பாதுகாக்க, கவுரவ் கோகாய் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர உள்ளேன்' என தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அரசிடம் இருந்து தனது மனைவி மானியம் பெற்றதற்கான ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்து விலகுவது உள்ளிட்ட எந்த தண்டனையும் ஏற்க தயாராக இருப்பதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா திட்டவட்டமாக கூறியுள்ளார்.