< Back
தேசிய செய்திகள்
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாடுபடுவோம் - ஜுகல் கிஷோர் சர்மா

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

"மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாடுபடுவோம்" - ஜுகல் கிஷோர் சர்மா

தினத்தந்தி
|
2 March 2024 11:19 PM IST

ஜம்மு காஷ்மீரில் ஜுகல் கிஷோர் சர்மாவும், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் ஜிதேந்தர் சிங்கும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் முதல் ஆளாக வேட்பாளரை நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், நேற்று விடிய விடிய வேட்பாளர் தேர்வு தொடர்பாக பா.ஜனதா தலைமை ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் ஜுகல் கிஷோர் சர்மாவும், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் ஜிதேந்தர் சிங்கும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பா.ஜனதா அதிக அர்ப்பணிப்புடன் பொதுமக்களுக்காக பாடுபடும் என்றும், "மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கு உழைப்போம்" என்றும் ஜுகல் கிஷோர் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்களுக்கு சேவை செய்ய மற்றொரு வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் பா.ஜனதா தலைவர் ரவீந்தர் ராணா, அசோக் ஜி, எனது ஒட்டுமொத்த மாநில அணி மற்றும் குறிப்பாக யூனியன் பிரதேசத்தின் குடிமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய என்னை தகுதியானவர் என்று கருதியவர்களுக்கு நன்றி. நாங்கள் பொதுமக்களுக்காக அதிக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம், மேலும் மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாடுபடுவோம்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் தீர்மானத்தை நிறைவேற்றுவோம்" என்று ஜுகல் கிஷோர் சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்