தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்
|நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தி தேர்தல் பத்திரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
தேர்தல் பத்திரம் தொடர்பான நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், 'சட்ட விரோதமான திட்டம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டத்தை, மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என நிதி மந்திரி கூறியிருக்கிறார். 'பிரதமருக்கு பணம் வழங்குங்கள்' ஊழல் மூலம் பா.ஜனதா ரூ.4 லட்சம் கோடியை கொள்ளையடித்தது நமக்கு தெரியும். தற்போது அதை அவர்கள் தொடர விரும்புகிறார்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் கூறுகையில், 'தேர்தல் பத்திரம் குறித்த நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த தேர்தலுக்கு அவர்களிடம் (பா.ஜனதா) பணம் இருக்கிறது, ஆனால் அவர்கள் தோற்கும்போது அவர்களுக்கு பணம் தேவைப்படும் என்பதே அவர்களின் பிரச்சினை' என்று தெரிவித்தார்.