காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பா?
|சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட நீரை ஜூன் மாதத்தில் கர்நாடகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகளும், கர்நாடகத்தில் இருந்து நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா, கேரளாவில் இருந்து நீர்வளத்துறை முதன்மை செயலாளர் அசோக்குமார் சிங், புதுச்சேரியில் இருந்து பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயந்தகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 4 மாநில நீரியல் புள்ளி விவர சேகரிப்புக்கு பிறகு தமிழ்நாட்டு அதிகாரிகள் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வலியுறுத்தி பேசினர். "ஜூன் 24-ந்தேதி நிலவரப்படி 12.490 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருப்பு உள்ளது. இதில் 2 டி.எம்.சி. மட்டுமே பயன்படுத்த முடியும். குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே, 12-ந்தேதியன்று பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடியவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட நீரை ஜூன் மாதத்தில் கர்நாடகம் வழங்கவில்லை. பற்றாக்குறை உள்ளது. எனவே ஜூன் மாத பற்றாக்குறை தண்ணீர் 5.367 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை மாதத்துக்காக 31.24 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். தண்ணீர் தரும் சூழ்நிலை இல்லை என வாதிட்டனர். இது சிறிதுநேரம் நீடித்தது.
ஆனால் ஆணைய தலைவரோ தண்ணீர் திறப்பு விஷயத்தில் எந்த உத்தரவையும் கர்நாடகத்துக்கு பிறப்பிக்கவில்லை. உத்தரவு பிறப்பிக்காமேலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டார். தண்ணீர் திறப்பு பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு நாளை (வியாழக்கிழமை) கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.