< Back
தேசிய செய்திகள்
இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷிய தூதர் தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷிய தூதர் தகவல்

தினத்தந்தி
|
8 Feb 2023 7:50 AM IST

இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள் வழங்கப்படும் என்று ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41,366 கோடி) மதிப்பில் 'எஸ்-400' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் 5 தொகுப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு கையெழுத்திட்டது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. ஆனாலும் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்தன. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் ரஷியா 'எஸ்-400' ஏவுகணை அமைப்புகளின் முதல் தொகுப்பை இந்தியாவுக்கு வழங்கியது. அதன் பின்னர் 2-வது தொகுப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கியது.

இந்த நிலையில் 'எஸ்-400' ஏவுகணை அமைப்புகளின் 3-வது தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தப்போது இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவும், ரஷியாவும் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் அடுத்த தொகுப்பு விரைவில் வழங்கப்படும். இரு தரப்பினரும் முழு ஒப்பந்தத்தையும் முடிக்க உறுதிபூண்டுள்ளோம். யாரும் அதை தடுக்க முடியாது. ஏற்கனவே எஸ்-400 ஏவுகணை அமைப்பின் 2 தொகுப்புகள் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்டு விட்டன. மீதம் உள்ளவை விரைவில் சப்ளை செய்யப்படும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டால், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ரஷியா தயாராக உள்ளது" என கூறினார்.

மேலும் செய்திகள்