நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தர்ணா - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
|மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் நாளைக்குள்(பிப்.1) வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மால்டா,
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதிக்குள்(நாளை) மாநிலத்தின் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால், பிப்ரவரி 2ம் தேதி முதல் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் வழங்க பிப்ரவரி 1ம் தேதி(நாளை) வரை நான் அவர்களுக்கு (மத்திய அரசு) இறுதி கெடு விடுத்துள்ளேன். இல்லையெனில் பிப்ரவரி 2ம் தேதி முதல் தர்ணா நடத்துவேன். நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால், அதை எப்படி இயக்கம் மூலம் பெறுவது என்பது எனக்குத் தெரியும். அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
மேலும் MGNREGA, Pradhan Mantri Gramin Awas Yojana (PMGAY) உள்ளிட்ட பல மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.