< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் சம்பவம்: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சம்பவம்: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

தினத்தந்தி
|
7 Oct 2023 4:15 AM IST

உத்தரபிரதேசத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா,

உத்தரபிரதேசத்தில், 2 மாணவர்கள், ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு, சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவர்களுக்கு 16 மற்றும் 18 வயதாகிறது. அவர்கள் நேற்று முன்தினம் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுமித் சிங் என்ற அந்த ஆசிரியரிடம் மாணவர்கள் பயிற்சி வகுப்பில் படித்துள்ளனர். அந்த ஆசிரியரும், மாணவர்களும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். மாணவர்களில் ஒருவர், மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து மாணவனின் சகோதரர் ஆசிரியரிடம் போனில் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து 6 மாதம் ஆகியிருந்த நிலையில் அவர்கள் பயிற்சி முடித்து வெளியேறி விட்டனர். இருந்தாலும், ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஆத்திரம் இருந்துள்ளது. நேற்று அவர்கள் பயிற்சி மையத்துக்கு வந்து ஆசிரியரை வெளியே அழைத்துள்ளனர். அவர் வெளியே வந்ததும் ஒரு மாணவன், அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். மற்றொருவர் அதை வீடியோ எடுத்துள்ளார்.

அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சினிமா பட பாணியில் ஒரு மாணவன் பேசி உள்ளான். "6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான் 40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச வேண்டும். இன்னும் 39 மீதம் இருக்கிறது" என்று கூறியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆசிரியர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. போலீசார் அந்த மாணவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்