< Back
தேசிய செய்திகள்
அகிலேஷ் யாதவ்
தேசிய செய்திகள்

உ.பி.யில் 80 இடங்களில் வெற்றி பெற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பமாட்டேன் - அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
2 July 2024 2:25 PM IST

நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், கன்னோஜ் தொகுதி எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் பேசியதாவது:

நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிவது ஏன் தெரியுமா? நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக முன்னதாக அரசே திட்டமிட்டு இதை செய்கிறது என்பதே உண்மை.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது முன்பும் நம்பிக்கையில்லை, இப்போதும் நம்பிக்கையில்லை. சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகளிலும் வென்றாலும் கூட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தை நம்பமாட்டேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பிரச்சினை இன்னும் ஓயவில்லை. தேர்தல் நடைமுறைகளிலிருந்து நீக்கப்படும் வரும் இவை குறித்த சர்ச்சை நீடிக்கும். அதை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

ஜூன் 4, 2024 வகுப்புவாத அரசியலில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள். இந்தத் தேர்தலில், வகுப்புவாத அரசியல் தோற்றுவிட்டது. இது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. மக்களவைத் தேர்தல் இந்தியாவில் வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கிறோம். அக்னிவீர் திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் அமல்படுத்தப்படவில்லை. தோட்டக்கலை பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்