< Back
தேசிய செய்திகள்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம் - யோகி ஆதித்யநாத்
தேசிய செய்திகள்

"இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம்" - யோகி ஆதித்யநாத்

தினத்தந்தி
|
27 Dec 2022 4:04 PM GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரபிரதேச மாநில அரசின் வரைவு அறிவிப்பை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்தது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 17 மாநகராட்சி மேயர்கள், 200 நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 545 நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் தற்காலிக பட்டியலை யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு கடந்த 5-ந்தேதி வெளியிட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த மும்முறை பரிசோதனையை பின்பற்றாமல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரைவைத் தயாரித்ததை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு முன், மாநில அரசு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, இதர பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு பிரத்யேக ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசு விரைவான கணக்கெடுப்பை நடத்தியதாகவும், இது மும்முறை சோதனை முறையைப் போலவே சிறந்தது என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்தர பிரதேச அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து பேசிய உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், "சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கிறோம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்த மாட்டோம். தேவைப்பட்டால் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வோம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்