அண்டை நாடுகளுடன் நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை விட்டுத்தர மாட்டோம் - ராஜ்நாத்சிங்
|அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை விட்டுத்தர மாட்டோம் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
விட்டுக்கொடுக்க மாட்டோம்
திருவனந்தபுரத்தில் சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப்பயண நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ''நமது நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது'' என்று கூறினார். எனவே அண்டை நாடுகளுடன் நமக்கு நல்லுறவு நட்புறவு இருப்பது அவசியம்.அதே சமயத்தில் அந்த நட்புறவுக்காக தேச பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தேச பாதுகாப்பை விட்டுக்கொடுத்து எந்த நாட்டுடனும் நல்லுறவு தேவையில்லை.
தற்சார்பு இந்தியா
'தொழில்கள் மூலம் வளமை' என்று ஸ்ரீநாராயண குரு போதித்தார். நமது 'தற்சார்பு இந்தியா' கொள்கைக்கு அதுவே அடிப்படை. அதனால்தான் பொருளாதாரத்தில் உலகின் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் உடல் என்னும் எல்லையை ராணுவத்தின் உதவியுடன் பாதுகாக்க நான் பணியாற்றுவதுபோல் இந்த மடத்தின் துறவிகள் நாட்டின் ஆன்மாவை பாதுகாக்க பணியாற்றி வருகிறார்கள். உங்கள் பணியை பாராட்டுகிறேன். உடலும் ஆன்மாவும் பாதுகாப்பாக இருந்தால்தான் ஒரு நாடு உயிர்வாழ முடியும்.
உலகமே ஒரு குடும்பம்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை இந்திய பாரம்பரியத்தில் இல்லை என்றும் அவை பிரெஞ்சு புரட்சியில் இருந்து வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அது சரியல்ல. அவையெல்லாம் இந்திய கலாசாரத்தில் இருப்பவை. நமது பழங்கால நூல்களிலும் துறவிகள் தத்துவ ஞானிகளின் போதனைகளிலும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஒருபடி மேலே போய் உலக சமத்துவம் பற்றி பேசினர். 'உலகமே ஒரு குடும்பம்' என்பதை வலியுறுத்தினர்.
பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி
பிரதமர் மோடியின் தாயார் மறைவை கேட்டதும் நான் டெல்லி திரும்ப நினைத்தேன். ஆனால் அரசு கடமைகளை முடித்துவிட்டு வருமாறு ஒவ்வொருவருக்கும் பிரதமர் சொல்லி விட்டார். ஆகவே அனைவரின் சார்பில் பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அனைவரும் ஒரு நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.