பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டேன் - கேரள கவர்னர் திட்டவட்டம்
|கேரள அரசு நிறைவேற்றியுள்ள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை அனுமதிக்கமாட்டேன் என்று அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கோட்டயம்,
கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து துணைேவந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் திருத்த மசோதா ஒன்றை மாநில அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந்தேதி நிறைவேறியது.
முன்னதாக லோக் அயுக்தா திருத்த மசோதாவும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே கடந்த 30-ந்தேதி நிறைவேற்றப்பட்டு இருந்தது.
கவர்னர் எதிர்ப்பு
இந்த 2 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி மற்றும் பிற மந்திரிகளின் தகுதியற்ற உறவினர்களை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிப்பதற்கு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
என்னுடைய வேந்தர் பதவியை விட்டுத்தருகிறேன் என ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். ஆனால் அனைத்தையும் நீங்கள்தான் (அரசு) செய்ய வேண்டும், அதில் நான் ைகயெழுத்து போட வேண்டும் என விரும்புகிறீர்கள். அது முடியாது.
இந்த மசோதா மூலம் சட்ட விேராதமானவற்றையும், சட்டபூர்வமாக முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்கமாட்டேன்.
லோக் அயுக்தா திருத்த மசோதா
யாரையும் தங்கள் சொந்த காரணத்திற்காக நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்பதுதான் நீதித்துறையின் அடிப்படை கோட்பாடு.
ஆனால் லோக் அயுக்தா திருத்த மசோதா, ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகள் மீதான மேல்முறையீட்டு அதிகாரியாக நிர்வாகியை மாற்ற முயற்சிக்கிறது.
இவ்வாறு கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டினார்.
இதன் மூலம் கேரளாவில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது.