டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மோதல்!
|5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ராய்ப்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 ஆட்டம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தொடரை இழக்கக்கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணியினர் வரிந்து கட்டி நிற்பர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.