< Back
தேசிய செய்திகள்
நீதி வெல்லும் என்று நம்புகிறேன் - ஜாமீனில் விடுதலையான கவிதா பேட்டி

கோப்புப்படம் ANI

தேசிய செய்திகள்

நீதி வெல்லும் என்று நம்புகிறேன் - ஜாமீனில் விடுதலையான கவிதா பேட்டி

தினத்தந்தி
|
28 Aug 2024 3:43 PM IST

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர்.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு கவிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, 5 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நீதிக்காக நிச்சயம் போராடுவோம் என்று கவிதா கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா கூறும்போது, "நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் நிச்சயமாக போராடுவோம்; உறுதியை இழக்க மாட்டோம். நான் போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்