எங்கள் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் கூட்டணியை ஆதரிக்க தயார் - மெகபூபா முப்தி
|காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
ஸ்ரீநகர்,
90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி, செப்., 25ம் தேதி மற்றும் அக். 1ம் தேதி என 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இதில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக, 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், ரேஷன் கடைகளில் மீண்டும் சர்க்கரை, மண்ணெண்ணெய் வினியோகம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலியுறுத்துவோம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே மாநிலத்தின் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சி, தேசிய காங், கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் எங்கள் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்க தயார் என மெகபூபா முப்தி அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, எல்லை சாலைகளை திறப்பது உள்ளிட்ட எங்கள் செயல் திட்டங்களை காங்கிரசோ அல்லது தேசிய மாநாடு கட்சியோ ஏற்பதாக இருந்தால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம் என கூறுவோம். எங்களுக்கு வேறு எதையும் விட காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் மிகவும் முக்கியம். பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்' என்று மெகபூபா முப்தி கூறினார்.