கேரளா: குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் மரணத்திற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் - மந்திரி வீணா ஜார்ஜ்
|குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞரின் மரணத்திற்கான காரணங்கள் ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அவர் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பபட்டது. அதன் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், அந்த இளைஞர் நேற்று திடீரென உயிரிழந்தார்.
குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குரங்கு அம்மை நோயானது, கொரோனா தொற்றை போல் வீரியமிக்கதாகவே அல்லது தொற்று நோயாகவோ இல்லை. ஆனால் அது பரவுகிறது. கொரோனா உயிரிழப்புகளை ஒப்பிடும் போது இதன் இறப்பு வீதம் குறைவாகவே உள்ளது.
22 வயது இளைஞருக்கு உடலில் வேறு எந்த நோயும்,பிற உடல்நல பிரச்சினைகளும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும். அவர் ஜீலை 21-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பிறகு மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் ஆராயப்படும்.
இந்த வகை குரங்கு அம்மை நோய் பரவுவதால், அதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் இந்த மாறுபாடு குறித்து எந்த ஆய்வு முடிவுகளும் கிடைக்கவில்லை. எனவே இது குறித்த ஆய்வுகளை கேரளா மேற்கொண்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.