< Back
தேசிய செய்திகள்
370 தொகுதிகளை கைப்பற்றுமா பா.ஜ.க. ...? பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள்...
தேசிய செய்திகள்

370 தொகுதிகளை கைப்பற்றுமா பா.ஜ.க. ...? பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள்...

தினத்தந்தி
|
25 Feb 2024 1:37 PM IST

3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்போது என்ன ஏற்படும் என்பது பற்றியும் கிஷோர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது. ஆளும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைக்கவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, ஆட்சியை கைப்பற்றவும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி வாய்ப்பு, கைப்பற்ற கூடிய தொகுதிகள் உள்ளிட்டவற்றை பற்றிய அவருடைய கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

இதன்படி, வருகிற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. தனியாக 370 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான சாத்தியம் இல்லை என அவர் கூறுகிறார். பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது.

இதனை குறிப்பிட்டு, பிரதமர் மோடி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கூறும்போது, பா.ஜ.க. தனியாக 370 தொகுதிகளை கைப்பற்றுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும் என கூறினார். தொடர்ந்து பல பேரணிகளில் பேசும்போதும் கூட, 370 தொகுதிகள் இலக்கை பற்றி தொடர்ந்து கூறி வருகிறார்.

இதுபற்றி குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க. தனியாக 370 மக்களவை தொகுதிகளை கைப்பற்றினால், அது ஆச்சரியம்தான். அதற்கான சாத்தியம் மிக குறைவாக உள்ளது. இல்லையென்றே கூட கூறலாம்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையை பற்றி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.க. தொண்டர்களுக்கான ஓர் இலக்காகவே இது இருக்குமே தவிர, அந்த அளவுக்கு எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றுவதற்கான சாத்தியம் கிடையாது என்றே நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானாவில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்ற சாத்தியம் உள்ளது. தமிழகத்திலும் கூட முதன்முறையாக இரண்டு இலக்கங்களில் தொகுதிகளை கைப்பற்ற கூடும்.

மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளி போன்ற விவகாரங்கள் ஆளுங்கட்சிக்கு (திரிணாமுல் காங்கிரஸ்) பின்னடைவை ஏற்படுத்த கூடும். ஆனால், சந்தேஷ்காளி விவகாரம் இல்லாவிட்டாலும் கூட வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரவே செய்கிறது.

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் கணக்கு முடிந்தே விட்டது என்று நினைப்பவர்களுக்கு தேர்தல் முடிவு ஆச்சரியம் ஏற்படுத்தும் என்று கிஷோர் கூறியுள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்போது என்ன ஏற்படும் என்பது பற்றியும் கிஷோர் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து பலவீனமடைய கூடும். எந்தவொரு தனிநபரோ அல்லது ஒரு குழுவோ அதிகாரம் படைத்தவர்களாக ஆகும்பொழுது, சமூகத்தின் ஜனநாயக விசயங்களில் சமரசம் ஏற்படுத்தப்படும் என்று கூறி, இதற்கு எடுத்துக்காட்டாக இந்திரா காந்தியை அவர் சுட்டி காட்டியுள்ளார்.

அதற்காக இந்தியா, சீனாவை போன்று மாறாது. ஆனால், ஏகாதிபத்திய ஆட்சிக்கான அறிகுறிகள் அதிக முக்கியத்துவம் பெறும். ஆனால், நாட்டில் 15 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியை பற்றி குறிப்பிட்ட கிஷோர், அவர்கள் செய்து வரும் விசயங்கள் அனைத்தும் கடந்த ஆண்டிலேயே செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 7 முதல் 10 நாட்களுக்கு மேல் கூட அவர்கள் பணியாற்றவில்லை.

ராகுல் காந்தியால் ஐரோப்பாவுக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும் என்றால், பின்னர் ஏன் அந்த கூட்டணியால் அதனை விட கூடுதலான நாட்கள் பணியாற்ற முடியாது? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

இந்தியா கூட்டணியானது 2024 மக்களவை தேர்தலை கடந்து, அடுத்து என்ன? என்று தன்னுடைய பார்வையை செலுத்த வேண்டும் என்றும் கிஷோர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்