பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள முடிவு
|பெங்களூருவில் நாளை ( திங்கட் கிழமை) நடைபெறும் எதிர்க்கட்சிகளின் விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
2 நாள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக கடந்த மாதம் பாட்னாவில் சுமார் 15 கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நாளை மாலையில் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விருந்தும், நாளை மறுநாள் ஆலோசனையும் நடக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 24 கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்தவகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை
ஆனால் நாளை நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மம்தா பானர்ஜிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், 'மம்தா பானர்ஜியை ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனினும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் செல்ல அனுமதித்து இருக்கிறார்கள். எனவே விருந்தை தவிர்க்கும் மம்தா பானர்ஜி, 18-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்' என தெரிவித்தன.
தேர்தல் வன்முறை
அதேநேரம் மம்தா பானர்ஜியின் சார்பில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓபிரையன் ஆகியோர் விருந்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இவர்கள் இருவரும் 18-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் மம்தா பானர்ஜியுடன் கலந்து கொள்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பிய மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அங்கே எதிரெதிர் முனையில் களமாடிய திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தலைவர்கள் முதல் முறையாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது.