< Back
தேசிய செய்திகள்
தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்; பாக்கு, வாழைமரங்கள் சேதம்
தேசிய செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்; பாக்கு, வாழைமரங்கள் சேதம்

தினத்தந்தி
|
21 July 2022 3:08 PM GMT

தீர்த்தஹள்ளி அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாக்கு, வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.

சிவமொக்கா;

காட்டுயானைகள் அட்டகாசம்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பிதுரகோடு அருகே மல்லந்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி மல்லந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

மேலும் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் மல்லந்தூர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் காட்டுயானைகள், அதேகிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை, பாக்கு மரங்களை முறித்துப்போட்டு சேதப்படுத்தியது.

மேலும் பக்கத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.


கிராம மக்கள் கோரிக்கை

இதனை நேற்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்து வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார். காட்டுயானைகள் நாசப்படுத்தியதில் வெங்கடேசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது கிராம மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்படியும் கோரிக்ைக வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்