ஹனூர் அருகே மோட்டார் சைக்கிளை துவம்சம் செய்த காட்டுயானை
|ஹனூர் அருகே சாலையில் வந்த மோட்டார் சைக்கிளை காட்டுயானை துவம்சம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கொள்ளேகால்:
ஹனூர் அருகே சாலையில் வந்த மோட்டார் சைக்கிளை காட்டுயானை துவம்சம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
காட்டுயானைகள் அட்டகாசம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கரிகேகண்டி பகுதியில் வாகன சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சோதனை சாவடியின் அருகே காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வீடுகளுக்குள் புகுந்த காட்டுயானைகள், பொருட்களை அடித்து நொறுக்கின. மேலும் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.
இந்தநிலையில் அந்த காட்டுயானைகளை பிடித்து வேறு வனப்பகுதியில் விடும்படி கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் காட்டுயானை ஒன்று கரிகேகண்டி சோதனை சாவடி பகுதியில் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மீது தாக்குதல்
இந்த சோதனை சாவடி வழியாக வழக்கம்போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரம் திடீரென்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஒன்று, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து தாக்க முயற்சித்தது. இதை பார்த்த அவர்கள் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பியோடினர். ஆனால் யானை விடவில்லை. அவர்களை துரத்தி சென்று தாக்க முயற்சித்தது.
ஆனால் அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அந்த யானை சாலையில் கிடந்த வாகனங்களை தும்பிக்கையால் தூக்கி எறிந்தது. இந்த தாக்குதலில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் யானையின் அட்டகாசத்தை பார்த்த சோதனை சாவடி ஊழியர்கள் உடனே இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
வீடியோ வைரல்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் துரத்தி விட்டனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் மோட்டார் சைக்கிள்களை யானை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.