விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
|பங்காருபேட்டை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் ரூ.16 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
கோலார் தங்கவயல்:
பங்காருபேட்டை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் ரூ.16 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
காட்டுயானைகள்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த வனப்பகுதி தமிழ்நாட்டு எல்லையில் அமைந்திருப்பதால், அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் காட்டுயானைகளும், பங்காருபேட்டைக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் கர்நாடக எல்லைக்குள் புகுந்தது. அந்த காட்டுயானைகள் பங்காருபேட்டை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியை மிதித்துக்கொன்றது. மேலும் அப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான விளைப்பயிர்களை நாசப்படுத்தியது.
விவசாயிகள் ஆதங்கம்
இதனால் ஆதங்கம் அடைந்த விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர்களது கோரிக்கைகளை ஏற்ற வனத்துறையினர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா கம்மசந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்தன. அவைகள் தமிழக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த காட்டுயானைகள் ஆகும். அந்த காட்டுயானைகள் கொச்சேனஹள்ளி கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் புகுந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான நெல், கேழ்வரகு, தக்காளி காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின.
வனத்துறையினர் உறுதி
நேற்று காலை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் விளைப்பயிர்கள் நாசமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டனர்.
அப்போது காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கிராம மக்கள், வனத்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது வனத்துறையினர் இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.