அழையா விருந்தாளியாக வீட்டுக்கு வந்த காட்டு யானை
|ஹாசன் அருகே அழையா விருந்தாளியாக வீட்டுக்கு காட்டு யானை வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாசன்:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள கொல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ஷெட்டி. விவசாயி. கொல்லஹள்ளி வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ் ஷெட்டியின் குடும்பத்தினர் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் ஒரு காட்டு யானை புகுந்தது. அந்த யானை நேராக சந்தோஷ் ஷெட்டியின் வீட்டு வளாகத்திற்குள் புகுந்தது.
இதனால் வீட்டு முன்பு நின்றிருந்த சந்தோஷ் ஷெட்டி, அவரது குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து வீட்டுக்குள் பதுங்கி கொண்டனர். பின்னர் வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து சைரன் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து அங்கிருந்து நகர்ந்த காட்டு யானை அருகில் உள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. இதனால் கிராம மக்கள் காபி தோட்டம் அருகே செல்ல வேண்டாம் என்றும், யானை நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமாக செயல்படவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சந்தோஷ் ஷெட்டி வீட்டுக்கு அழையா விருந்தாளியாக யானை வந்த காட்சிகள், அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.