< Back
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது

தினத்தந்தி
|
5 April 2023 2:51 AM IST

ஹலகூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. சட்டவிரோத மின்வேலி அமைத்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹலகூர்:

ஹலகூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. சட்டவிரோத மின்வேலி அமைத்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வனவிலங்குகள் அட்டகாசம்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே லிங்கப்பட்டணா கிராமத்தையொட்டி பீமாகிண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த கெஞ்சகவுடா என்ற விவசாயி, வனவிலங்குகளிடம் இருந்து தனது சோள பயிரை பாதுகாக்க தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானை ஒன்று வெளியேறியது.

காட்டு யானை செத்தது

அந்த காட்டு யானை, கெஞ்சகவுடாவின் விளைநிலத்துக்குள் செல்ல முயன்றது. அப்போது மின்வேலியில் கால் வைத்தபோது, யானை மீது மின்சாரம் தாக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி மகாதேவசாமி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அதே இடத்திலேயே யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் காட்டு யானையின் உடல் அதேப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதற்கிடையே, விவசாயி கெஞ்சகவுடா தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் மலவள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கெஞ்சகவுடாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி மீது நடவடிக்கை

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்சாரம் தாக்கி செத்தது 25 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். யானையின் தந்தத்தை எடுத்து கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளேன். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்