வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது 5 பெண்களை துரத்திய காட்டு யானை
|விராஜ்பேட்டை அருகே வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது 5 பெண் தொழிலாளர்களை காட்டு யானை துரத்தியது. அவர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குடகு:
விராஜ்பேட்டை அருகே வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது 5 பெண் தொழிலாளர்களை காட்டு யானை துரத்தியது. அவர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காட்டு யானை அட்டகாசம்
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகே பாலிபெட்டா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி காபி தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் பீதியில் உள்ள மக்கள், காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி வனத்துறையினரும் காட்டு யானையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
5 பேர் உயிர் தப்பினர்
இந்த நிலையில், நேற்று முன்தினம் பாலிபெட்டாவை சேர்ந்த 5 பெண் தொழிலாளர்கள் காபி ேதாட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. காட்டு யானையை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் காட்டு யானை அவர்களை விடாமல் துரத்தி சென்றது.
ஆனாலும் அவர்கள் 5 பேரும் காட்டு யானையின் பிடியில் இருந்து தப்பி சென்றனர். இதையடுத்து காட்டு யானை வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காட்டு யானையை தூரத்தில் வரும்போதே அவர்கள் பார்த்ததும் தப்பி ஓடியதால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோரிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள், காட்டு யானை அட்டகாசம் நிரந்தரமாக உள்ளது என்றும், இதனால் காபி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவே பயமாக உள்ளது என்றும், அதனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தினர்.
இதனை ஏற்ற வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.