காபி தோட்டத்திற்குள் குட்டியை ஈன்ற காட்டுயானை; பீதியில் கிராம மக்கள்
|சக்லேஷ்புராவில் காபி தோட்டத்தில் குட்டியை ஈன்ற காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஹாசன்:
சக்லேஷ்புராவில் காபி தோட்டத்தில் குட்டியை ஈன்ற காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
காட்டுயானை நடமாட்டம்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கிரிஹள்ளி கிராமம் காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி காட்டுயானைகள், காபி தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் ஒன்று இந்த காபி தோட்டத்திற்குள் வந்தது. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லவில்லை.
இதை பார்த்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்தனர். அப்போது காட்டுயானை ஒன்று ஒரு குட்டியை ஈன்றிருப்பது தெரியவந்தது. இதனால் அந்த காட்டுயானை அங்கேயே சுற்றி வருவதாகவும், அதற்கு துணையாக சில காட்டுயானைகள் காபி தோட்டத்தில் வலம் வருவதாகவும் தெரியவந்தது.
காட்டிற்குள் செல்லும்
குட்டியை ஈன்ற காட்டுயானை, மிகவும் கோபத்துடன் இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் யார் அருகே சென்றாலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை துரத்தாமல் அதுவாக செல்லும் வரை காத்திருக்கும்படி கிராம மக்களுக்கு கூறியுள்ளனர். மேலும் காபி தோட்டத்தின் அருகே சில நாட்களுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த யானை காபி தோட்டத்தில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்துவிடும் என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினர்களுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர்.