ரெயில் பயணத்தில் சோகம்.. கணவன் இறந்ததை அறியாமல் அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பயணம் செய்த மனைவி
|சாதாரணமாக ரெயிலில் ஏறி அமர்ந்தவர் திடீரென இறந்துவிட்டார் என்பதை சக பயணிகளால் நம்பவே முடியவில்லை.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகருக்கு செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, தூக்கத்திலேயே இறந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு ரெயிலில் ஏறிய அந்த பயணியுடன், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் கூட்டாளி ஒருவர் பயணம் செய்துள்ளனர். ரெயிலில் ஏறியதும் அந்த பயணி தூங்கத் தொடங்கினார். அருகில் அவரது மனைவி அமர்ந்து பயணம் செய்துள்ளார். விடிந்து வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் தூங்குவதாக நினைத்து மனைவியும் எழுப்பாமல் இருந்துள்ளார்.
நேரம் செல்லச் செல்ல அவரது அசைவற்ற நிலையைப் பார்த்து சந்தேகமடைந்த மனைவி மற்றும் குழந்தைகள் தட்டி எழுப்பினர். ஆனால் எந்த அசைவும் இல்லை. அதன்பிறகே அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அனைவரும் கதறி அழுதனர்.
மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக ரெயிலில் ஏறி அமர்ந்தவர் திடீரென இறந்துவிட்டார் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான்சி ரெயில் நிலையத்தை ரெயில் அடைந்ததும், அவரது உடல் இறக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.