கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
|இந்த கொலையில் கள்ளக்காதலர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேடு ஞானப்பிரகாசம் நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). பெயிண்டர். அவரது மனைவி ஷர்மிளா (44). இவர்கள் தற்போது வினோபா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உடலை சவக்கிடங்கில் வைத்துவிட்டனர்.
பாஸ்கரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் பாஸ்கர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பாஸ்கரின் மனைவி ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:-
ஷர்மிளாவுக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட கணவர் பாஸ்கர் ஷர்மிளாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை தீர்த்துக்கட்ட அவர் திட்டம்போட்டார். நேற்று முன்தினம் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நெஞ்சுவலி ஏற்பட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
இருப்பினும் அவர் ஒருவர் மட்டுமே இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று போலீசார் கருதுகின்றனர். அவரது கள்ளக்காதலர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.