பேருந்து நிலையத்தில் கணவர் கண்ணெதிரே மனைவி சுட்டுக்கொலை
|அரியானாவில் கணவர் கண்ணெதிரே மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்,
அரியனா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குடானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது மனைவி முன்னி தேவியுடன் மகேந்திரகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நெருங்கி வந்து திடீரென துப்பாக்கியால் முன்னி தேவியின் நெற்றியில் சுட்டுள்ளார். மேலும் முன்னி தேவியின் வயிற்றில் இரண்டு முறை எட்டி மிதித்துவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.
கணவர் தினேஷின் கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முன்னி தேவி அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.