இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவி கொலை; அருகிலேயே படுத்து தூங்கிய கணவர்
|டெல்லியில் இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு, அருகிலேயே கணவர் படுத்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் சுல்தான்பூரில் வசித்து வருபவர் வினோத் குமார் துபே (வயது 47). இவரது மனைவி சோனாலி துபே. சம்பவத்தன்று இரவில், இரண்டு பேரும் மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்கும் போதை தலைக்கேறி உள்ளது.
வினோத் தனது மனைவியிடம் இரவு உணவு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சோனாலி மறுத்து உள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் சோனாலி தனது கணவரை அறைந்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சோனாலியின் கணவர் அவரை அடித்து, தலையணையை கொண்டு முகத்தில் அழுத்தி உள்ளார். இதில், சோனாலி உயிரிழந்து விட்டார்.
ஆனால், அது தெரியாமல் சோனாலியின் உடல் அருகேயே வினோத் படுத்து தூங்கி உள்ளார். பின்பு எழுந்து பார்த்தபோது, சோனாலி உயிரிழந்து கிடந்தது தெரிந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, ரூ.40 ஆயிரம் பணம், உடைகள் உள்ளிட்டவற்றை அள்ளி, பை ஒன்றில் போட்டு கொண்டு வேறிடத்திற்கு தப்பி சென்றுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில், வினோத் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் சோனாலி கொல்லப்பட்ட விவரங்களை அவர் போலீசிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.