குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் செலுத்த பணம் கேட்ட மனைவி.. கணவன் செய்த கொடூரம்
|குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா(31). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பிரியங்கா, ராஜேஷிடம் குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ், பணம் கொடுக்காமல் நாட்களை கடந்தி வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இது தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு வந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ், தனது மனைவியை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த சுத்தியலைக் கொண்டு அவரின் தலையில் அடித்துள்ளார். இதில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.