கவிதாவுக்கு வீட்டு உணவு வழங்காதது ஏன்? திகார் சிறை அதிகாரிக்கு கோர்ட்டு கேள்வி
|திகார் சிறையில் கவிதாவுக்கு மேற்படி பொருட்களை வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரது மூக்கு கண்ணாடி உள்ளிட்டவையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகளும், மாநில எம்.எல்.சி.யுமான கவிதா கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை காவலை முடித்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் கவிதா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பபேஜா, கவிதாவுக்கு வீட்டில் சமைத்த உணவு, மெத்தை, செருப்பு, உடைகள், போர்வை, புத்தகங்கள், கம்பளி, பேனா, பேப்பர், நகைகள் மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என திகார் சிறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் திகார் சிறையில் கவிதாவுக்கு மேற்படி பொருட்களை வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரது மூக்கு கண்ணாடி உள்ளிட்டவையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.எனவே இது தொடர்பாக கவிதா சார்பில் மீண்டும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, கவிதாவுக்கு வீட்டு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்காதது ஏன்? திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு சிறை சூப்பிரண்டுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.