< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் இந்தியா  நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் 'இந்தியா' நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை

தினத்தந்தி
|
19 July 2023 2:15 PM IST

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா மெயின் பிரண்ட் அல்லது இந்தியா மெயின் அலையன்ஸ் என்று பெயரிட வேண்டும் என்று நிதிஷ்குமார் பரிந்துரைத்தார்.

புதுடெல்லி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தின.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரவு உணவு விருந்தளித்தார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி (இந்தியா) என்று பெயரிட்டு உள்ளனர்.இந்த இந்தியா பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. 'இந்தியன் நேஷனல் டெவலப்மென்டல் இன்குளுசிவ் அலையன்ஸ்' என்பதாகும். அதாவது இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி என்பதாகும்.

ஆனால் தற்போது பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பிரச்சாரத்தை தொடங்கியவர் நிதிஷ் குமார், ஆனால் முன்னணியின் பெயரை முடிவு செய்யும் போது, அவரது பரிந்துரை புறக்கணிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என எப்படி பெயர் வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 'இந்தியா' மற்றும் 'என்டிஏ' ஒரே மாதிரியாக ஒலிக்கிறது என்று அவர் கூறினார். இது சரியல்ல. நிதிஷ் குமார் முன்னணிக்கு இந்தியா மெயின் பிரண்ட் அல்லது இந்தியா மெயின் அலையன்ஸ் என்று பெயரிட வேண்டும் என்று பரிந்துரைத்தார், ஆனால் அவரது பரிந்துரை புறக்கணிக்கப்பட்டது.

இடதுசாரி தலைவர்களும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட தயங்கினர். "சேவ் இந்தியா அலையன்ஸ்" பெயரை பரிந்துரைத்தனர். பெரும்பாலான கட்சிகள் இந்தியாவை விரும்பினர். அதன் பிறகு நிதிஷ் குமார் ஒப்புக்கொண்டார். அதற்கு அவர், "சரி, உங்கள் அனைவருக்கும் பெயர் பிடித்திருந்தால் பரவாயில்லை" என கூறினார்.

மேலும் செய்திகள்