ஜி-20 அமைப்பின் சின்னத்தில் தாமரை ஏன்? - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம்
|‘ஜி-20’ அமைப்பின் சின்னத்தில் தாமரை இடம்பெற்றது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.
புதுடெல்லி,
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ள ஜி-20 அமைப்புக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது.
இதனை முன்னிட்டு அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 'ஜி-20' அமைப்பின் சின்னம், கருப்பொருள், இணையதளத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த 'ஜி-20' அமைப்பின் சின்னத்தில், பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமான தாமரையை இடம் பெறச்செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் 'ஜி-20' அமைப்பின் சின்னத்தில் தாமரை இடம்பெற்றது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். அதன்படி இந்தியாவின் கலாச்சார அடையாளத்துடன் இணைந்த தேசிய மலர் தாமரை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 1857-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரு கையில் ரொட்டியும், மற்றொரு கையில் தாமரையும் ஏந்தி போராடினார்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.