சோனியா, ராஜீவ் காந்தியை அவமதித்ததற்காக பிரதமர் மோடி ஏன் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை? நானா படோலே கேள்வி
|சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை அவமதித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏன் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என நானா படோலே கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசின் கடமை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாக்பூரில் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் நானா படோலே கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான எதேச்சதிகார ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. நாட்டின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளான நீரவ் மோடி மற்றும் லலித் மோடி குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். அதற்கு பதிலளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
தியாகியின் மகன்
பா.ஜனதா கட்சி மந்திரி கள் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவமானப்படுத்தினர். அவர்கள் ராகுல் காந்தியை தேச விரோதி என்று அழைக்கிறார்கள். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் பேரன் மற்றும் ஒரு தியாகியின் மகன் என்பதை மறந்துவிட்டார்கள். அவர்கள் இந்த நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை குறி வைக்கின்றனர். இந்த போராட்டம் ஒரு தேசியவாதியை தேச விரோதி என்று அழைக்கும் மனநிலைக்கு எதிரானது.
பிரதமர் மோடி காந்தி குடும்பத்தை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார். சோனியாக காந்தியை தொடர்ந்து தாக்கி பேசுகிறார். ராஜீவ் காந்தியை திருடன் என்று கூறிய பிரதமர் மோடி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அவருக்கு ஏன் இந்த மாதிரியான தண்டனை கிடைக்கவில்லை?
மாபெரும் பேரணி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களின் குரலாக மாறி வருகிறார். அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பா.ஜனதா கட்சிக்கு எதிராக வருகிற 29-ந் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் பேரணிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.