ஊழல் புகாருக்கு ஆளான மந்திரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்காதது ஏன்?; காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கேள்வி
|ஊழல் புகாருக்கு ஆளான மந்திரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்காதது ஏன்? என்று காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரம்பாபுரி மடாதிபதியை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் பேசிய விஷயம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடகம் அனைத்து தரப்பு மக்களும் வாழும் அமைதி பூங்கா. இதை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன. உத்தரபிரதேச மாதிரியை பின்பற்றுவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். வளர்ச்சியில் அந்த மாநிலம் கடைசியில் உள்ளது. அந்த மாதிரி நமக்கு வேண்டுமா?.
சில மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் அவர்களின் வீடுகளில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை நடைபெறாதது ஏன். அரசு நடைபெறவில்லை, நாங்கள் அதை தள்ளிக்கொண்டு செல்கிறோம் என்று சட்டத்துறை மந்திரி மாதுசாமியே கூறியுள்ளார். காங்கிரஸ் போராட்டத்தை அனுமதித்தால் குடகில் கொலை விழும் என்று நடிகர் ஜக்கேஷ் எம்.பி. கூறியுள்ளார்.
தான் என்ன பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச தெளிவு கூட அவருக்கு இல்லை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.