அதானி விவகாரத்தில் மோடி அரசு ஏன் இவ்வளவு பயப்படுகிறது? - காங்கிரஸ் கேள்வி
|அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை,
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கேரா மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதானி ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதற்கு அஞ்சுகிறது. அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும்?
அதானி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீசில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார்? இந்த முதலீட்டில் சீனாவை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். யார் அந்த நபர்? இதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் ராகுல் காந்தி இந்த பிரச்சினையை எழுப்பினார்.
அதானி குழுமத்திற்கு பிரதமர் மோடி அரசு சிறப்பு ஆதரவை அளித்து வருகிறது. அதானிக்கு எஸ்.பி.ஐ. வங்கி மூலமாக கடன் வழங்கப்பட்டது. இலங்கை அரசிடம் தங்கள் நாட்டின் மின் துறை ஒப்பந்தங்களை அதானிக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்தார். பங்களாதேசின் மின் வினியோக ஒப்பந்தத்தை அதானி ஒதுக்க அவர் பரிந்துரை செய்தார். எல்.ஐ.சி. முதலீட்டாளர்களின் பணம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது.
அதானிக்கும், மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பி மத்திய அரசை ராகுல் காந்தி நிலைகுலைய வைத்தார். மக்களவையில் ராகுல் காந்தியின் உரையில் பெரும்பகுதி நீக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதானி குறித்து முன்வைத்த கேள்விகளும் நீக்கப்பட்டது.
அதானி விவகாரத்தில் மோடி அரசு ஏன் இவ்வளவு பயப்படுகிறது? கடந்த பிப்ரவரி 7-ந் தேதி மக்களவையில் அதானி- பிரதமர் மோடி குறித்த பிரச்சினையை ராகுல் காந்தி எழுப்பினார். 9 நாட்களுக்கு பிறகு பழைய சூரத் நீதிமன்ற வழக்கு புல்லட் ரெயிலின் வேகத்தை விட வேகமாக திறக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.