குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையர் பதில்
|குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைவதால் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இந்த 2 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடுத்த வரும் 5 மாநில தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி வானிலை போன்ற பல காரணங்களும் உள்ளன. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த விரும்புகிறோம். இமாச்சல பிரதேசத்தில் 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.